சென்னை: தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை மிகவும் பிடித்துவிட்டதாக தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா கூறியுள்ளார்.
'திருடன் போலீஸ்', 'உள்குத்து' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தின் பணிகளை தொடங்கியுள்ளார். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக உருவாகிறது.
இந்தப் படத்தில் நடிகை ரெஜினா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 13 முதல் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா கூறுகையில், ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை மிகவும் பிடித்தது.
யாரும் கேள்விப்படாத தளத்தில் வித்தியாசமாக ஆச்சர்யப்படுத்தும் விதமாக கதை இருந்தது. கார்த்திக் ராஜு கதை சொன்ன போதே இந்த கதாபாத்திரத்திற்கு ரெஜினா சரியாக இருப்பார் என நினைத்தேன். அவரும் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார்.
Production no 1 என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ரெஜினா, தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்பு ஜனவரி 13 முதல் குற்றாலத்தில் தொடங்கவுள்ளது.
படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் விவரம் ஃபர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
சமீப காலமாக பெண் பாத்திரங்களை மையமாக வைத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெற்றிபெற்று வருகிறது. அந்த வகையில் எங்களது முதல் படைப்பே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாக அமைவதில் பெருமை கொள்கிறோம் என்றார்.