தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இராவண கோட்டம்' என் திரை வாழ்க்கையில் திருப்பு முனை தரும் - நடிகர் ஷாந்தனு உருக்கம்! - இராவண கோட்டம் சாந்தனு

சென்னை: 'இராவண கோட்டம்' திரைப்படம் எனது திரை வாழ்க்கையில் திருப்பு முனை தரும் படமாக இருக்கும் என ஷாந்தனு கூறியுள்ளார்.

சாந்தனு
சாந்தனு

By

Published : Aug 7, 2020, 4:10 PM IST

இயக்குநர் மணி ரத்னத்தின் தயாரிப்பில் 'வானம் கொட்டட்டும்', விஜய்யின் 'மாஸ்டர்', 'முருங்கைக்காய் சிப்ஸ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் ஷாந்தனு, தற்போது 'இராவண கோட்டம்' என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறுகையில், 'கடந்த ஆண்டே 'இராவண கோட்டம்' படத்தை ஆரம்பித்து விட்டோம். செயல் வடிவம் கொடுத்து, படத்தை உருவாக்க எங்கள் குழுவில் உள்ள, ஒவ்வொருவரும் தங்கள் அதிகபட்ச உழைப்பைக் கொடுத்து பணியாற்றுகின்றனர்.

விக்ரம் சுகுமாரனின் வலுவான ஸ்க்ரிப்ட், ஷாந்தனு பாக்கியராஜ் போன்ற திறமை மிக்க நட்சத்திரங்கள், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். கோடை கால சூழலில் முழுக் கதையும் நடைபெறும் வகையில் படத்தின் களம் அமைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கியபோது, மிகவும் சாதகமான தட்ப வெட்பச் சூழலே நிலவியதால், மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாகிவிடக்கூடாது என்பதிலும், படத்தின் சாராம்சத்தை சிதைத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம்.

இந்த ஆண்டு இதே பருவத்தில் படப்பிடிப்பைத் தொடர திட்டமிட்டிருந்தபோது, கரோனா தொற்றால் முடியாமல் போனது. ஷாந்தனு, விக்ரம் சுகுமாரன் திறமை மீது கொண்ட முழு நம்பிக்கை காரணமாக, இந்தப் படத்தில் முதலீடு செய்து, படத்தை எடுத்து வருகிறேன்.

சுமுகமான சூழல் ஏற்பட்ட பிறகு, அரசின் அனுமதி கிடைத்ததும், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாங்கள் படப்பிடிப்பைத் தொடரவிருக்கிறோம்' என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் ஷாந்தனு பாக்கியராஜ் கூறுகையில், 'இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் பொறுமை காத்து, எங்களுக்கு ஆதரவாக இருக்கும் தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு தான், எங்கள் குழு முதலில் நன்றி செலுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாக எங்கள் குடும்ப நண்பராக இருக்கும் அவர், எனது வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு, எனக்காக பிரார்த்தனை செய்பவர். பெரிய தொழில் முனைவோரான அவருக்கு, சினிமாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும்; எனக்கு ஒரு திருப்புமுனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 'இராவண கோட்டம்' படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கிறார்.

'இராவண கோட்டம்' படக்குழுவினர்
படத்தயாரிப்பு தாமதமாகி நீண்ட போதிலும், பொறுமை காக்கும் அவர், எங்களிடம் அவசரம் காட்ட வேண்டாம். சிறப்பான முறையில் படத்தை உருவாக்குங்கள் என்று கூறுகிறார். 'இராவண கோட்டம்' படத்திலிருந்து எனக்கு எந்த லாபமும் வேண்டாம். தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்க, நான் போட்ட முதலீடு மட்டும் திரும்ப வந்தால் போதும் என்று கூறிவிட்டார். 'இராவண கோட்டம்' படத்தைத் தொடங்கும்போது, கண்ணன் ரவி சார், இனி உனக்கு நல்ல படவாய்ப்புகள் நிறைய வரும் என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னதைப் போலவே, 'இராவண கோட்டம்' படம் வெளியாவதற்கு முன்பே, மணி ரத்னம் சாரின் 'வானம் கொட்டட்டும்', விஜய் அண்ணாவின் 'மாஸ்டர்', மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் சில படங்கள் எனக்குக் கிடைத்தது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தப்படம் எனது திரை வாழ்க்கையில் திருப்பு முனை தரும் படமாக இருக்கும்' என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details