மும்பை: நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் - தீபிகா '83' படத்தின் நிறைவு விழா பார்ட்டியில் தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தும் விதமாக உற்சாக நடனம் ஆடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
காதல் திருமணம் செய்துகொண்ட ரன்வீர் - தீபிகா ஜோடி தொடர்ந்து பிஸியாக திரைப்படங்களில் நடித்துவருகின்றனர். இதையடுத்து '83' என்ற படத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்ட இந்த இருவரும், ஒரே மாதிரியான வெள்ளை நிற மேலாடை அணிந்தவாறு வந்து ஒருவரையொருவர் பாராட்டி மகிழ்ந்தனர்.
இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஒன்றாக போஸ் கொடுத்தனர். மில்லி செகண்டுகள் இடைவெளியில்லாமல் புகைப்படக்காரர்கள் இந்த அழகு ஜோடியை புகைப்படங்களாக க்ளிக் செய்தனர்.
பின்னர், பாலிவுட் படத்தின் பாடல் ஒலிக்க இருவரும் படக்குழுவினருடன் இணைந்தவாறு நடனமாடினர். தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை நடனம் ஆடியபோது, பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாடும்போது என கிடைத்த இடங்களில் வெளிப்படுத்தினர் இந்த நட்சத்திர தம்பதி.
அங்கு கூடியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தீபிகா பவுலிங் செய்ய, ரன்வீர் அதனை எதிர்கொண்டு ஷாட் அடிப்பது போன்று ஆக்ஷனில் செய்கை செய்தனர்.
1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு '83' படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கபில் தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் மனைவி ரோமி தேவ் கதாபாத்திரத்தில் தீபிகா நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் '83' திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.