இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
கிரிக்கெட் வீரர்கள் 'தோனி', 'சச்சின்' ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 'முத்தையா முரளிதரன்' வாழ்க்கை வரலாற்றையும் படமாக்க உள்ளனர்.
இப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இப்படத்தின் டைட்டிலை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 800 என்ற தற்காலிக டைட்டிலுடன் இணையத்தில் வலம்வருகிறது.
தற்போது இந்தப் படத்தில் 'பாகுபலி' பட நடிகர் ராணா டகுபதி தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், 'சுரேஷ் புரொடக்ஷன்ஸுடன் நானும், தார் பிக்ஷர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் பெயரையும் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.