பாலிவுட்டில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, அனில் தவான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் 'அந்தாதுன்'. இந்தப்படத்தை பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.
ஒரு முன்னாள் திரைப்பட நடிகரின் கொலை மற்றும் கண்பார்வையற்ற ஒருவர், தன்னை அறியாமல் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் திரில் நிறைந்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்ததோடு, சிறந்த படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றது.
இந்த நிலையில், இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மோகன் ராஜா தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். ஆயுஷ்மான் குரானா நடித்த கண்பார்வையற்ற இளைஞர் கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார்.
தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்திற்கான நடிகை, பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.