காஞ்சனா படங்களைப் பார்த்து கோலிவுட் ரசிகர்கள் பம்முவதைப் போல் டோலிவுட் ரசிகர்களை மிரளவைத்து வந்த 'ராஜு காரி காதி' படத்தின் மூன்றாம் பாகம் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த 'காஞ்சனா' சீரிஸ் படங்கள் திகில், காமெடி கலந்து சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை என அனைத்து வயதினரையும் கவரும் விதமாக ஜனரஞ்சமான படமாக அமைந்திருந்தது.
இதே போல் தெலுங்கில், ஓம்கார் இயக்கத்தில் வெளிவந்த 'ராஜூ காரி காதி' இரண்டு பாகங்களும் திகில் கலந்த காமெடி பாணியில் வசூலில் சக்கை போடு போட்டன.
இந்த நிலையில், மூன்றாம் பாகமாக 'ராஜு காரி காதி 3' தயாராக வரும் நிலையில், அதன் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மூன்று நண்பர்கள் இணைந்து ரிசார்ட் ஒன்றை விலைக்கு வாங்கி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். இதையடுத்து அவர்கள் வாங்கிய பின் அந்த ரிசார்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களிலிருந்து அவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதை மையமாகக் கொண்டுள்ளது மூன்றாம் பாகத்தின் கதை.
இந்தப் படத்தில் அஸ்வின் பாபு, அவிகா கோர், அலி, ஊர்வசி, அஜய் கோஷ், பிரபாஸ் சீனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - ஷபிர். தயாரிப்பு - ஓக் என்டர்டெயின்மெண்ட்.
படத்தின் ட்ரெய்லர் முந்தைய பாகங்களை போல் இல்லாமல் காமெடிக்கு குறைவாகவும், திகில் காட்சிகளுக்கு அதிகமாகவும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.