இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாரான சினிமா என்ற பெருமையைப் பெற்ற '2.0', சீனா ரசிகர்களை பெரிதாகக் கவராமல் போயிருப்பதால் படம் அங்கு தோல்வியை சந்தித்துள்ளது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்து சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர் படமாகக் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது '2.0'
லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெருமையப் பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியான '2.0' ரசிகர்களை கவர்ந்து 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது.
இந்த நிலையில், '2.0' படத்தை சீனி மொழியில் டப்பிங் செய்து கடந்த 6ஆம் தேதி சீனாவில் பிரமாண்டமாக வெளியிட்டனர். இதையடுத்து, அங்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களைக் கவராமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மரணஅடியை சந்தித்துள்ளது. படம் ரிலீசாகி ஒருவாரம் ஆகியிருக்கும் நிலையில் 22 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
'2.0' படத்துக்கு சீனாவில் விழுந்த மரண அடி ஏற்கனவே, இந்திய அளவில் அதிக வசூலை அள்ளிய 'பாகுபலி 2' சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் பெரிதாக சோபிக்காமல் முதல் வாரத்தில் 52 கோடி ரூபாய்தான் வசூலித்தாகத் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தற்போது '2.0' படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.
இதனிடையே, விஷுவல் எஃபெக்ட்ஸ் படங்களை விட சஸ்பென்ஸ் த்ரில்லர், பேமிலி டிராமா வகை சினிமாக்களை சீனர்கள் அதிகம் விரும்புவதாகப் பேச்சுகள் நிலவுகின்றன. அதற்கு ஏற்றார்போல் பாலிவுட் படங்களான தங்கல், பஞ்ரங்கி பாய்ஜான், அந்தாதூன் போன்ற படங்கள் நல்ல வசூலை ஈட்டியிருக்கின்றன.