சென்னை: இயக்குநர் பாலசந்தர் சிலையை அவரது பிள்ளையான கமல் திறந்திருப்பது சிறப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகம், மறைந்த இயக்குநர் பாலசந்தருக்கு சிலை திறக்கும் நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
அங்கு அவர் பேசுகையில், அருமை நண்பர், கலையுலக அண்ணா கமல்ஹாசன், கலையுலக பிதாமகன், துரோணாச்சாரியார் இயக்குநர் கே. பாலசந்தர் என்று பேச்சை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விழாவில் வந்திருந்த அனைவருக்கும் தனது வணக்கத்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
கமல்ஹாசன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் நேற்றும் இன்றும். பல கலைஞர்களுக்கு தந்தை கே. பாலசந்தர். இந்த இடத்துக்கு இதற்கு முன் வந்தேன். சந்திரமுகி பங்களா போல் இருந்தது. தற்போது ஒரு பிரமாண்டமான அலுவலகத்தை திறந்துவைத்திருக்கிறார் கமல்.
கமல் அரசியலுக்கு வந்தாலும் தாய்வீடான சினிமாவைவிட மாட்டார். அவர் நடிக்கவில்லை என்றாலும் ராஜ் கமல் மூலம் பல கலைஞர்களை உருவாக்குவார். கலை என்பது அவருக்கு உயிர். எங்கு போனாலும் அதை மறக்கமாட்டார்.
ராஜபார்வையில் கண் இல்லாமல் நடித்திருப்பார். அந்தச் சமயத்தில் நான் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம், 'என்னடா உன் நண்பனுக்கு கண்ணே இல்லாமல் ராஜபார்வைன்னு பெயர் வச்சிருக்கான். மாற்ற சொல்லு, நான் சொன்னால் கேக்கமாட்டான்' என்றார்.
இதேபோல், அவர் நடித்த விக்ரம் எடுத்த இயக்குநர் ராஜசேகர் நான் நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தையும் எடுத்தார். அப்போதே விக்ரம் படம் பற்றி அதிகமாகப் பேசுவார்.
ராஜ்கமல் நிறுவனம் எடுத்த படங்களில் எனக்குப் பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். எனக்காக சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்துகாட்டினார்கள். அந்தப் படம் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு கமலின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்து கை குலுக்கி வாழ்த்தினேன்.
அதேபோன்று அவரது தேவர் மகன் ஒரு காவியம். கலைவண்ணம் கொண்ட கமர்ஷியல் படமாக இதுபோன்று யாரும் எடுக்க முடியாது
நான் அடிக்கடி பார்க்கும் மூன்றுபடங்களாக காட் பாதர், திருவிளையாடல், ஹேராம் இருக்கிறது. 'ஹேராம்' படத்தை 30 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் படத்தில் புதுமை தெரிகிறது.
இயக்குநர் பாலசந்தர் சிலை திறந்தவுடன் எனது உணர்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. சிலையை பார்க்கும்போது அவருடன் பழகிய அந்த நாட்கள் கண்முன்னே நினைவுக்கு வருகிறது.
தமிழ் மட்டும் கற்றுக்கொள் நான் உன்னை எங்கு கொண்டு உட்கார வைக்கிறேன் பார் என்று என்னிடம் பாலசந்தர் சொன்னார். அவர் கூறிய நான் என்ற வார்த்தை தமிழ் மக்களைதான்.
பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேச்சு பாலசந்தரின் கலை குழந்தை கமல். கமல்ஹாசன் மீது பாலசந்தருக்கு அளவில்லாத பிரியம். அவர் பேசுறது, தூங்குவது என எல்லாத்தையும் ரசிப்பார். கமலுக்கு பாலசந்தர் இன்னொரு தந்தை. அதேபோல் கமலுக்கு இன்னொரு தந்தையாக அனந்து விளங்கினார். அவரைப்பற்றி பலருக்குத் தெரியாது. இயக்குநர் பாலசந்தரை விட அனந்துவிடம்தான் கமலுக்கு அந்நியோன்னியம் ஜாஸ்தி. அவருக்கு அனைத்தையும் சொல்லி கொடுத்ததே அனந்துதான். அவரது பிறந்தநாளில் அலுவலகம் திறந்து, கே.பி. சாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார் கமல்.வைரமுத்து கூறியது போல் யார் சிலை வைத்தாலும் அவர் வளர்த்த பிள்ளை கமல். பாலசந்தருக்கு அவர் வளர்த்த பிள்ளையான கமல் சிலை வைத்தது மிகவும் சிறப்பானது. கமல் குறித்து நிறைய பேச வேண்டும் 17ஆம் தேதி பிரமாண்ட நிகழ்ச்சி இருக்கிறது. அங்கு நிறையா பேசுகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.