இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'தர்பார்'. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் யோகி பாபு, நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிப்பதால் இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'தர்மதுரை' படத்தில் நடித்த திருநங்கை ஜீவா 'தர்பார்' படத்தில் நடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையடுத்து திருநங்கை ஜீவா ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இயக்குநர் சீனுராமசாமி, 'தர்மதுரை படத்தில் மக்கள்செல்வன் விஜய்சேதுபதியுடன், நடிகையாக அறிமுகமாகி, பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி, அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கை ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள திருநங்கை ஜீவா, 'நன்றி சார், எல்லாம் நீங்கள் தந்த வாழ்க்கை' என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் திருநங்கை ஜீவாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.