குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டங்கள் வன்முறையாக வெடித்ததை அடுத்து காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேற்று மட்டும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து திரையுலகினர் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய, தனது நிலைபாட்டை இதுவரை தெரிவிக்காமல் இருந்துவந்த நிலையில், தற்போது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.