சீன நாட்டில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா, இத்தாலி, ஈரான், இந்தியா எனப் பல நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் இந்தக் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடிவருகின்றன. அதன்படி பொதுமக்கள் யாரும் நாளை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.
அதற்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக பல அரசியல்வாதிகள், நடிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். பிரதமர் அறிவித்த, பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தருமாறு நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதில், இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது நிலையில் உள்ளது என்றும், இது மூன்றாவது நிலைக்குச் செல்லாமல் இருக்க மக்கள் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், இத்தாலி நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் தீவிரமானதைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் யாரும் அதனைப் பின்பற்றாததால்தான் இத்தாலி நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தது எனவும் தெரிவித்தார்.
அதனால் நாளை அனைவரும் இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருவோம் என்று வேண்டுகோள் விடுத்த ரஜினிகாந்த், கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களைப் பாராட்டுவோம் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா குறித்து ரஜினி மக்கள் மன்றத்தினர் விழிப்புணர்வு