சென்னை: கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் உடல் மூன்று நாள்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.
சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், ராம் சரண், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அந்த சமயத்தில் உடல்நலக்குறைவால் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இதனால், அவரால் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இயலவில்லை.