சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நேற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் இது குறித்து, தேனாம்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு வல்லுநர்களுடன் ரஜினிகாந்தின் வீட்டிற்குச் சோதனையிடச் சென்றனர். அச்சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் அது வதந்தி என்று தெரியவந்தது.
இதற்கிடையே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நபர் தொடர்பாகக் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்,கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அச்சிறுவனை கைது செய்து பின்னர் பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.
இந்நிலையில், அச்சிறுவனின் தந்தை தானும் ரஜினிகாந்தின் ரசிகன் என்று கூற, உடனே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நேரில் சென்று அவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்துள்ளனர்.