சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. கரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.
அப்போது படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி, அரசியல் பிரவேசம் உள்ளிட்டவைகளால் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டது.
பின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனா ரஜினி தனது வீட்டில் ஒய்வெடுத்துவந்தார். இந்நிலையில், 'அண்ணாத்த' படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
இதனையடுத்து 'அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் இன்று (மார்ச் 16) முதல் சென்னையில் தொடங்கியுள்ளதாகவும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தமிழ்நாட்டுக்குள்ளேயே படப்பிடிப்பை முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக சென்னை ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடந்த பிறகு பொள்ளாச்சி, கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.