ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஏழாயிரம் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது.
இப்படத்தின் சிறப்புக் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, நள்ளிரவு 12 மணி முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு கூடி பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் மட்டும் 27 திரையரங்குகளில் தர்பார் படம் திரையிடப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக மதுரை அரசரடி பகுதியில் உள்ள மதி திரையரங்கில் நள்ளிரவு முதல் ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் வாழைமரம், தோரணம் கட்டி அலங்கரித்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
மதுரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் இது குறித்து பேசிய ரஜினி மக்கள் மன்ற மதுரை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் அழகர், "எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதிலும் இளமையாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வெற்றியடையும். ரசிகர்கள் நள்ளிரவு முதலே திரையரங்கு முன்பு ஆடிப்பாடி கொண்டாடிவருகிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய ரஜினி ரசிகர் கோல்டன் சரவணன், தான் படையப்பா படத்திலிருந்து தலைவர் ரஜினிக்காக கோயிலில் அலகு குத்தி மண்சோறு சாப்பிட்டுவருவதாகத் தெரிவித்தார். முன்தினம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அலகு குத்தி மண் சோறு சாப்பிட்டதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க...
அதிகாலையில் 'தர்பார்' ரிலீஸ் - மேள தாளத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்!