இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ’தர்பார்’. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் வெளியான தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தை கலக்கியது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபு நடித்து வருகிறார்.
இவர்களோடு தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவாவும் இணைந்துள்ளார். 180 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வருவதால் தர்பார் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்கான ’ஏக் தீவானா தா’ படத்தில் நடித்தவர். இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் வளர்ந்துவரும் இளம் கதாநாயகராக இருந்தாலும் நல்ல கதையம்சம் பொருந்திய படத்தில் நடித்து வருகிறார். பிரதீக் பாப்பர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மெயின் வில்லன் இவர் இல்லை என்றாலும் இவரது கதாபாத்திரம் இப்படத்தின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
மேலும், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ’பிகில்’, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ ஆகிய இரு திரைப்படங்களும் தீபாவளி தினத்தன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.