பாகுபலி இயக்குநரான ராஜமௌலி தற்போது ”ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படம் 1920ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய இரண்டு புரட்சியாளர்களான அல்லூரி சீத்தாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் படத்தின் நாயகர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ராஜமௌலியின் ”ஆர்ஆர்ஆர்” படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடக்கம்!
ராஜமௌலியின் இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கியது.
இந்தப் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்தது. இந்நிலையில், படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் ராஜமௌலி கூறுகையில், ”யாருமே அறிந்திராத சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அல்லூரி சீத்தாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகிய இரண்டு தியாகிகள் குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்ன செய்தார்கள் என நமக்குத் தெரியாது. எனவே, இந்தப் படம் முழுக்க கற்பனையாகவே எடுக்கப்பட உள்ளது”, என்று கூறினார்.
ஜூனியர் என்டிஆர் கொமாரம் பீமாகவும், ராம் சரண் அல்லூரி சீத்தாராம ராஜூவாகவும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன், அலியா பட் ஆகியோரும் நடித்து வருகின்றனர். தமிழின் முன்னணி நடிகரான சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 300 கோடி செலவில் தயாராகும் ”ஆர்ஆர்ஆர்” படமானது 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.