தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், தயாரிப்பாளர் சுபாஷ் கரன், சுனில் ஷெட்டி, கதாசிரியர் கலைஞானம், நடிகர் அருண்விஜய், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் ராகவா லாரன்ஸ் பேசுகையில், ‘அரசியல் நாகரிகமே இல்லாமல் சிலர் பேசுகின்றனர். நாகரிகம் இல்லாமல் பேசும் குறிப்பட்ட ஒருவரால் நாட்டிற்கே கேடு. நான் ஆட்சிக்கு வரும் முன் நீங்கள் சாக வேண்டும் என்கிறார்.
என் தலைவனை அவர் தவறாகப் பேசினால் நான் திரும்ப பேசுவேன். சிறு வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன். இருவரும் இப்போது இணைந்திருப்பதைப் பார்க்கும்போது ஏதோ மாற்றம் ஏற்படப்போகிறது என்று தோன்றுகிறது. ரஜினி பப்ளிசிட்டி, பணம், புகழுக்காக அரசியலுக்கு வர தேவையில்லை’ என்றார்.
அவர் சிறு வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் என குறிப்பிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து லாரன்ஸ் தனது சமூக வலைதளமான ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கமல் பட போஸ்டர் மீது சாணி அடித்திருக்கிறேன் என்று பேசியதை மட்டும் எடுத்துக்கொண்டு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சியின் முழு வீடியோவையும் பார்த்தால் உங்களுக்கு புரியும். நான் சிறு வயதில் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகனாக இருந்திருக்கிறேன் என்று. விபரம் தெரியாமலே கமலுக்கு எதிராக இருந்திருக்கிறேன். தற்போது கமலும் ரஜினியும் கைகோர்த்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பேசியிருந்தேன்.
கமல் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நான் ஏதும் தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கலாம். முழு வீடியோவையும் பார்த்தால் நான் கமலுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பது புரியும். சிலர் திட்டமிட்டு என் பேச்சை திசை திருப்பி வருகின்றனர். என் இதயத்தில் கமலை எப்படி மதிக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.