நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று (மார்ச் 22) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட தொற்று காரணமாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார் தீப்பெட்டி கணேசன். இதையடுத்து அவருக்கு உடல்நலம் குணமாகி இன்று வீடு திரும்ப இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நடிகர் கார்த்தி என்கிற தீப்பெட்டி கணேசன் 'ரேணிகுண்டா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஐந்து இளைஞர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்த அந்தப் படத்தில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 'தென்மேற்கு பருவக்காற்று', 'பில்லா 2', 'நீர்ப்பறவை', 'ராஜபாட்டை', 'கோலமாவு கோகிலா', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நல்ல நடிகன் என்று பெயரெடுத்து வந்த கணேசன், இடையே சினிமா வாய்ப்புகள் இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்தார். இதையடுத்து திரை பிரபலங்கள் பலர் அவருக்கு உதவிய நிலையில், இன்று இவர் காலமானது திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த நிலையில் அவரது குழந்தைகளின் கல்விச் செலவை தான் ஏற்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனி வரும் காலத்திலும் என்னால் இயன்றவரையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்குச் செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.