மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கு சூழல் காரணமாக வேலையின்றி தவித்து உள்ளார். இதனால் அவர் சில நாட்கள் மதுரை ரயில் நிலையத்திலும், அலங்காநல்லூர் பகுதியிலும் பிச்சை எடுத்து உள்ளார். இவ்வாறு பிச்சை எடுத்த பணத்தை வைத்து ஒரு சிறிய தொழில் செய்ய முடிவு செய்து, டீ விற்க ஆரம்பித்துள்ளார்.
டீ விற்று ஆதரவற்றோருக்கு உதவி செய்த இளைஞர்- உதவி செய்ய முன்வந்த லாரன்ஸ்! - Madurai young boy
மதுரையில் டீ விற்பனை செய்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யும் இளைஞருக்கு நடிகர்கள் லாரன்ஸ் உதவி செய்ய முன்வந்துள்ளார்.

காலை, மாலை என்று இருவேளையிலும் ஒரு டீ, பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வதால் லாபம் வருவதாக அந்த இளைஞர் தெரிவித்தார். இந்நிலையில் அந்த இளைஞர் தான் வேலை இல்லாமல் அனாதையாக, சாப்பாட்டுக்குச் சிரமப்பட்டது போல், யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 10 பேருக்கு இலவசமாக, தன் கையில் சமைத்து சாப்பாடு கொடுத்து வருகிறார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைக்கண்ட நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அந்த இளைஞருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த இளைஞனின் தன்னம்பிக்கையைப் பார்க்கும் போது வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன். யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.