மாற்றுத் திறனாளிகளுக்கு நடனம் கற்றுத்தருவது, உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு உதவுவது என தன் சேவை மனப்பான்மைக்காக பெரிதும் பாராட்டப்படுபவர் ராகவா லாரன்ஸ். தற்போது கஜா புயலால் வீடு இழந்த சமூக சேவகருக்கு 10 லட்ச ரூபாய்க்கு வீடு கட்டித்தந்து அதன் கிரகபிரவேசத்தையும் நேரில் சென்று நடத்தியுள்ளார்.
லாரன்ஸ் - சமூக சேவகர் கணேசன் இதுகுறித்து லாரண்ஸ், “என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் அடிநாதமாக இருப்பது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் ஆகிய ரசிகர்கள்தான். அவர்களுக்கு வெறும் நன்றி என சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் ஒவ்வொரு முயற்சிகளாக செய்து வருகிறேன். தற்போது தாய் அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15 நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.
சமூக சேவகர் கணேசனுக்கு லாரன்ஸ் கட்டிக்கொடுத்த வீடு காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள் தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்பப்படுகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும், பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அதன் தொடக்கமாக கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நடத்தியுள்ளேன். இந்த வீட்டின் சாவியை சமூக சேவகருக்கு வழங்கும்போது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது” என தெரிவித்தார்.