பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழும் நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அந்தாதூன், பேட்மேன் ஆகிய இரு படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
மலிவு விலை நாப்கினை அறிமுகப்படுத்திய கோவையைச் சேர்ந்த விஞ்ஞாணி அருணாச்சலம் முருகானந்தம் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வெளியான 'பேட்மேன்' படத்துக்கு சமூக பிரச்னையை எடுத்துக் கூறிய படம் என்ற பிரிவில் தேசிய விருது கிடைத்துள்ளது. அதேபோல், சிறந்த தழுவல் திரைக்கதைக்காக 'அந்தாதூன்' படத்துக்கும், அதில் ஹீரோவாக நடித்த ஆயுஷ்மான் குர்ரானாவுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், 'பேட்மேன்', 'அந்தாதூன்' ஆகிய இரு படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இது குறித்து கூறியதாவது, ‘நான் நடித்துள்ள இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழச்சியளிக்கிறது. நான் விருதுக்காக ஏங்குபவள் இல்லை. இதுபோன்ற படங்கள் விருதுகள் பெறுவதைக் காட்டிலும், ரசிகர்கள் இவற்றை தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
'அந்தாதூன்' படத்துக்கு சிறப்பாக திரைக்கதை அமைத்து உருவாக்கியிருப்பார் அதன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். ஒவ்வொரு நிமிடமும் மாறுபட்ட திருப்பங்களுடன் சிறந்த திரில்லர் படமாக அமைந்திருக்கும். படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். அந்த வகையில் 'அந்தாதூன்' விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றதுடன், வர்த்தக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.
சமீப காலமாக வித்தியாசமான கதைகளுடன் ஹிந்தி படங்கள் வெளிவருகின்றன. இதுபோன்ற படங்களைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே ஹிந்தி சினிமாவுக்கு இது ஒரு நல்ல மாற்றம்’ என்று கூறினார்.