ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ - டேனில்லா தம்பதியனருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பல்பு ஃபிக்ஷன், கில் பில் போன்ற படங்களால் இந்திய சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் குவெண்டின் டேரன்டினா, தனது 56ஆவது வயதில் ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். இந்தத் தகவலை டேரண்டினோவின் பிரதிநிதி ஒருவர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு பாடகி டேனில்லா பிக் என்பவரை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் டேரண்டினோ. மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில், இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதாக பிரபல நாளிதழின் பேட்டி ஒன்றில் டேரண்டினோ - டேனில்லா தம்பதியினர் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படம் விமர்சக ரீதியாக பாராட்டைப் பெற்றதுடன், ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்கர் விருதுகளில் 10 பிரிவுகள் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம் சிறந்த துணை நடிகர் (பிராட் பிட்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என இரு விருதுகளைப் பெற்றது.
இரண்டு ஆஸ்கர் விருதுகள், தந்தையாக புரொமோஷன் என ஒரே மாதத்தில் இயக்குநர் டேரண்டினோவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.