பெங்களூரு : கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar). அக்டோபர் 29ஆம் தேதி காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் உடல் மூன்று நாள்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.
சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதே போல் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், ராம் சரண், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கன்னட திரையுலகில் 49 படங்கள் நடித்த புனித் ராஜ்குமார், கண்தானம் உள்ளிட்ட பல்வேறு பொதுநலப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.