சென்னை: பப்ஜி படத்தின் கதாநாயகன் அர்ஜுமனின் மாறுபட்ட புதிய லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'தாதா 87' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தனது ஜி மீடியா நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்'. பப்ஜி என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் கதாநாயகன் அர்ஜுமன் பெண் கதாபாத்திரம் ஒன்றில் தோன்றவுள்ளார்.
இதையடுத்து அந்தக் கதாபாத்திரத்திற்கான போஸ்டரைப் படக்குழுவினர் கார்த்திகை திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். காதில் ஜிமிக்கி கம்மல், நெற்றியில் பொட்டு, விபூதி என அச்சு அசல் பெண் கதாபாத்திரத்தில் போஸ்டரில் தோற்றமளிக்கிறார் அர்ஜுமன்.
'கார்த்திகை தீபம் ஏற்ற வந்தவள்' என்று அதில் குறிப்பிட்டு, 'தீபம்' என்ற வார்த்தையில் 'தீ' என்ற எழுத்தை மட்டும் சிவப்பு நிறத்தில் குறித்திருப்பதை, அர்ஜுமனுக்கு ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரமாக இருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.