தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே திரையரங்கங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நடமாட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியானது, வேண்டுமென்றே சிம்புவின் வெற்றியைத் தடுப்பதற்காகவே செய்த சதித் திட்டம் எனச் சமூக வலைதளங்களில் கருத்துகள் உலா வருகின்றன.
இது குறித்து 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில், "உலகத்திலேயே திரையரங்கிற்குச் செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.