'வந்தா ராஜாவதான் வருவேன்' படத்திற்கு பின் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிம்பு, ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தில் பணியாற்ற உள்ள நடிகர்கள், நடிகைள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை வெளியிட்டார்.
சிம்பு - வெங்கட் பிரபு 'மாநாடு'வில் கலந்துகொண்ட கலைஞர்கள் - சிம்புவின் மாநாடு அப்டேட்
சிம்பு நடிப்பில் உருவாக உள்ள 'மாநாடு' படத்தில் நடிக்க உள்ள நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிகையாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இவருடன், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நந்தன் பணியாற்ற உள்ளார். படத்தொகுப்பு பிரவீன் கே.எல், ஆர்ட் டைரக்டர் சேகர், புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன், சண்டை இயக்குநர் ஸ்டண்ட் சில்வா ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.
மேலும் இப்படத்தில் சிம்பு மூஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவரது கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்கள் கூறலாம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். அப்படி கூறும் பெயர்கள் படக்குழுவுக்கு பிடித்திருந்தால் அதுவே படத்தில் சிம்புவுக்கு வைக்கப்படும் மேலும் அந்த ரசிகர் ஒருநாள் முழுவதும் படபிடிப்பில் கலந்துகொள்ளலாம் என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.