ஊரடங்கு உத்தரவு காரணமாக கிட்டதட்ட 40 நாள்களாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து தமிழ்நாட்டில் வரும் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அறிவுப்பு வெளியானதிலிருந்து மது பிரியர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இருப்பினும் பலரும் மது கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் மதுக்கடைகள் திறக்கப்படுவது குறித்து, ’ஆடவர்’ படத்தின் தயாரிப்பாளரும், ‘மக்கள் செயல் பேரவை’ தலைவருமான சிவக்குமார் பிள்ளை பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டமை செய்வதுபோல், ஆளுமை இல்லா தமிழ்நாட்டில் காசு, பதவி சுகத்துக்காக ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள்வரை, ஆளுங்கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாடு மக்களை வேதனையில், விழி பிதுங்க வைக்கிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களாக கரோனாவை ஒழிக்கிறோம் வீட்டில் இருங்கள் என்று சொன்னார்கள், ஆனால் கரோனாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. கோயில்களின் கதவுகளை இழுத்து மூடிவிட்டு, மதுக்கடைகள் கதவுகளை திறந்து காசு பார்க்க போகிறார்கள். கரோனாவின் காற்றும் குறையாது. மதுவின் நாற்றமும் குறையாது. நம் கிராமங்களில் இருப்பவர்களை மதுக்கடைக்கு போகவிடாதீர்கள். மது, குடிப்பவர்களை அழித்துவிடும். கொஞ்சம், கொஞ்சமாக அவர்களை கொள்ளும் விஷம் என்று தெரியாமல் குடிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் மதுக்கடைக்கு போவதால் கரோனா அவர்களை மட்டுமில்லாமல், அவர்களது குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும். வீட்டில் இருக்கும் இளைஞர்களும், தாய்மார்களும் கவனமாக இருக்கவேண்டும். யாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீர்கள். மது குடிப்பதற்கு அனுமதிக்காதீர்கள். மது குடித்தால் நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் காலம் முழுவதும் கவலைப்படும்படி செய்துவிடும். மதுவை தவிர்ப்போம். மகத்தான வாழ்வை தொடர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அனுமதி கேட்கும் தயாரிப்பாளர்கள்!