கரோனா தொற்று காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையிலும், பெரிய திரை படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தினால் திரைத்துறையைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கான உதவிப் பணிகளில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஈடுபட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் உள்ள மேடை இசைக் கலைஞர்கள், சமையல் தொழிலாளர்கள், பந்தல் செட் அமைப்பவர்கள், தையல் தொழிலாளர்கள் என மொத்தம் 108 பேருக்கு அரிசி மூட்டைகள், காய்கறிகள், சத்து மாத்திரைகள், முகக் கவசங்கள் போன்றவற்றை கலப்பை மக்கள் இயக்கத்தினர் முன்னிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வழங்கியுள்ளார் .