தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒப்பற்ற கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானை புறக்கணித்திருக்க கூடாது - தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் - ஏ.ஆர். ரஹ்மான் விவகாரத்தில் தயாரிப்பாளர் குஞ்சுமோன் அறிக்கை

இந்தியாவில் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்களால் போற்றப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இன்னும் வெகு தூரம் பயணித்து நிறைய வெகுமதிகளும் புகழும் அடைய வேண்டும். என் படங்கள் மூலமாக புகழ் பெற்று, இந்திய சினிமாவுக்கும், உலக சினிமாவுக்கும் பெருமையாக விளங்கும் ஒப்பற்ற இசை கலைஞராகத் திகழும் அவரை இப்படி அவமானப்படுத்தி புறக்கணிப்பு செய்தது, பிறரை விட எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்று கே.டி. குஞ்மோன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Producer KT Kunjumon and AR Rahman
தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

By

Published : Jul 29, 2020, 8:43 AM IST

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை பாலிவுட்டில் புறக்கணிக்கப்பட்டதாக வெளிவந்த தகவலுக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலிவுட்டில் தனக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்று ஏ.ஆர்.ரஹ்மானின் ட்விட்டர் பதிவு என்னை மிகவும் வேதனை அடைய செய்தது. ரஹ்மான் பின்னால் போகக் கூடாது என்று பலரும் பாலிவுட் சினிமாவில் பரப்புரை செய்வதாகவும், அப்போதுதான் ஏன் தன்னை தேடி நல்ல படங்கள் வருவதில்லை என்றும் தெரியவந்தது என்று கூறியிருந்தார் ரஹ்மான்.

என்னைப் பொறுத்தவரை ரஹ்மான் எனது சொந்த சகோதரனுக்கு நிகர். ரஹ்மானின் வளர்ச்சியில் நான் மிகவும் பெருமை கொள்பவன். அதற்கான உரிமையும் எனக்கு உண்டு. 27 ஆண்டுகளுக்கு முன் 1993இல் நான் தயாரித்த ஜென்டில்மேன் என்ற பிரமாண்ட படத்தில் அவர் இசையமைத்து, அந்தப் படத்தின் பாடல் மூலமாக ரஹ்மான் உலக புகழ் பெற்றார். அதன்பின் தொடர்ச்சியாக எனது படங்களான காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற படங்களும், அதன் பாடல்கள் ரஹ்மானின் புகழுக்கும் வளர்ச்சிக்கும் தூண்டுதலானது.

பின்னர், பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் சென்று தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் மிகப் பெரிய வெகுமதியான ஆஸ்கர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இத்தகைய திறமை மிக்க கலைஞனை வளர விடாமல் பாலிவுட்டில் சிலர் முயன்றார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது. அவர்களது இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். விருப்பமுள்ள கலைஞர்களை வைத்து படம் எடுப்பதும், எடுக்காமல் இருப்பதும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் விருப்பமும், உரிமயும் ஆகும். ஆனால் நல்ல கலைஞர்களை புறக்கணிப்பதும், ஏளனம் செய்வதும், அவர்களது வளர்ச்சியை தடுப்பதும் நல்ல செயல் அல்ல.

தனிப்பட்ட முறையிலும், குடும்ப ரீதியாகவும் எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் மிகவும் நெருங்கிய நட்பு உள்ளது. இன்றும், உலகெங்கும் அவர் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் நான் தயாரித்த படங்களில் இடம்பெறும் சூப்பர்ஹிட் பாடல்களான ஒட்டகத்த கட்டிக்கோ, சிக்கு புக்கு ரெயிலே, முக்கால முக்காபுலா, முஸ்தபா முஸ்தபா, ஊர்வசி ஊர்வசி போன்ற பாடல்கள் இசைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறார்.

இதைப்பார்க்கும்போது நானும் சந்தோஷப்பட்டு, பெருமை கொள்வதுண்டு. தன்னை அணுக எல்லோருக்கும் தன் வாசலை திறந்து வைத்திருக்கும் ரஹ்மானை பற்றி, இப்படியொரு செய்தி பரவுவதில் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

என் படங்கள் மூலமாக புகழ் பெற்று, இந்திய சினிமாவுக்கும், உலக சினிமாவுக்கும் பெருமையாக விளங்கும் ஒப்பற்ற இசை கலைஞராகத் திகழும் அவரை இப்படி அவமானப்படுத்தி புறக்கணிப்பு செய்தது, பிறரை விட எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்களால் போற்றப்படும் அவர், இன்னும் வெகு தூரம் பயணித்து நிறைய வெகுமதிகளும் புகழும் அடைய வேண்டும் என்பதே எனது ஆசையும் பிரார்த்தனையும். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானை அவமதித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம் - இயக்குநர் வ.கௌதமன்

ABOUT THE AUTHOR

...view details