தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் கொம்பன், சிங்கம் சீரியஸ், நோட்டா, மகாமுனி போன்ற திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இதற்கிடையில் பணமோசடி வழக்கில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராக தவறினால் காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா தாக்கத்தால் பொதுமக்களும், திரைத்துறையினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இன்றைய நிலையில் சில தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டுவருகின்றன. இந்தச் செய்திகளில் எள் முனையளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தமிழ்த் திரையுலகிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளையும், பல திறமையான நடிகர்களையும், படைப்பாளிகளையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தந்துள்ள எனது 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட 'மகாமுனி' திரைப்படம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியானது.
நீதிமணி என்பவர் 2019ஆம் ஆண்டு மே மாதம் என்னை அணுகி 'மகாமுனி' திரைப்படத்தின் தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும் என்று கோரினார். அவ்வகையில் 2019ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி ஆறு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் தொகைக்கு நீதிமணியின் 'Tarun Pictures' நிறுவனத்திற்கு 'மகாமுனி' திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம் போடப்பட்டது.
நீதிமணி பகுதித் தொகையாக இரண்டு கோடியே முப்பது லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தினார். மீதமுள்ள மூன்று கோடியே தொன்னூற்று ஐந்து லட்சம் ரூபாய் தொகையைப் பிறகு தருவதாகக் கூறினார். இன்றுவரை தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். மீதமுள்ள தொகையைத் தரவேண்டி நீதிமணி மீது சினிமா துறையின் சட்டதிட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.