தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2020 - 2022ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனு பரிசீலனை நேற்று (அக்.23) நடைபெற்றது. இதில் கதிரேசன், ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இம்மூவரையும் தகுதி நீக்கம் செய்ய செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் தேர்தல் அலுவலருக்கு மனு அளித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத்திற்கு தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவருடனான் இந்தப் பேட்டி பின்வருமாறு:
”தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறதே?
கடந்த நிர்வாகத்தில் பதவி வகித்த கதிரேசன், ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகிய மூன்று உறுப்பினர்கள், சங்க விதிமுறைகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் முரணாக, செயலர், பொருளாளர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மனு அளித்துள்ளனர். அவர்களின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன் நிறுத்தி வைத்துள்ளார்.
அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் உரிய ஆவணங்களை சமர்பிக்க உள்ளோம். நீதியரசர் சரியான நடவடிக்கை எடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்வார் என்று நம்புகிறோம். அப்படி நடைபெறவில்லை என்றால் வரும் 30ஆம் தேதி நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.