இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான ஆர்.கே. சுரேஷ், 'தர்மபிரபு', 'மருது', 'ஸ்கெட்ச்', 'பில்லா பாண்டி', 'நம்ம வீட்டுப் பிள்ளை' உள்ளிட்டப் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தவிர, சில மலையாளப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இதனிடையே மலையாளத்தில் 2018இல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'ஜோசப்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.கே. சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் இயக்குநர் பாலாவின் 'பி ஸ்டூடியோஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, 'ஜோசப்' படத்தின் இயக்குநர் எம். பத்மகுமாரே தமிழிலும் இப்படத்தையும் இயக்குகிறார். இதற்காக ஆர்.கே. சுரேஷ், 95 கிலோ எடை வரை கூட்டி பருமனாகி இருந்தார்.
மீண்டும் பழைய உடல் எடைக்குத் திரும்பிய ஆர்.கே. சுரேஷ் இந்தப் படத்தைத் தொடர்ந்து மறைந்த பாமக சட்டப்பேரவை உறுப்பினரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஆர்.கே. சுரேஷ் காடுவெட்டி குருவாக நடிக்கிறார். சோலை ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு, சாதிக் இசையமைக்கிறார்.இந்தப் படத்திற்காக ஆர்.கே. சுரேஷ் 105 கிலோ உடல் எடையைக் கூட்டி இருந்தார். தற்போது மீண்டும் உடற்பயிற்சி செய்து, தனது பழைய உடல் எடையான 79 கிலோவிற்குக் கொண்டு வந்துள்ளார்.இந்த இரண்டு புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெட்டிசன்களை பரவசப்படுத்தி உள்ளார், ஆர்.கே. சுரேஷ்