தமிழ் சினிமாவில் 'வாமனன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மாடலாக பல விளம்பர படங்களில் நடித்துவந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காகக் காத்திருந்த ப்ரியா ஆனந்த் தனக்கு கிடைக்கும் சிறிய ரோல்களையும் விடாமல் பயன்படுத்திக் கொண்டார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான, 'எதிர்நீச்சல்' படத்தில் சிவகார்த்திகேயனுக்குக் ஜோடியாக நடித்திருந்தார். பள்ளி ஆசிரியையாக அப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இவர், தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய மொழி படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்துவருகிறார்.
இறுதியாக இவர், தமிழில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் மருத்துவர் பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரது நடிப்பில் தற்போது அந்தகன், காசேதான் கடவுளடா ரீமேக் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
வளர்ந்துவரும் நாயகியான ப்ரியா ஆனந்த் இன்று (செப் 17) தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.