சென்னை: 'கிளப்ஹவுஸ்' சமூக வலைதளத்தை தான் பயன்படுத்தவில்லை என நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
கிளப்ஹவுஸ் சமூக வலைதளம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் ஐஓஎஸ்-யில் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது, ஆண்ட்ராய்டிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளப்ஹவுஸ் சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் பெயரில் போலியாக ஒரு பக்கம் தொடங்கப்பட்டு, அவரைப் போலவே ஒருவர் பேசியுள்ளார். இதனைக் கண்டுபிடித்த அவர், அந்த இளைஞர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'சூரஜ் இதை நீங்கள் விளையாட்டிற்காகச் செய்தது என்பது புரிகிறது. ஆனால், இதுபோன்ற விஷயம் மிகத் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் பேசிவந்ததை லைவில் கிட்டத்தட்ட 2,500 பேர் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
உண்மையில் நான் தான் பேசுகிறேன் என்று நினைத்துப் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டனர். அதனால் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உடனே இந்தப் பதிவை வெளியிட்டேன்.
நீங்கள் செய்த விஷயம் தவறு என்பதை ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி. மிமிக்ரி ஒரு அற்புதமான கலை. அதனால், அதனைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். நான் இணையதளத்தில் தவறாகப் பேசுபவர்களை மன்னிக்க மாட்டேன். நான் கிளப்ஹவுஸ் தளத்தில் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சர்வதேச விருதுகளை வென்ற ஆர்யா திரைப்படம்