ப்ரித்விராஜின் பிரமாண்ட விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படம் பற்றி அறிவிப்பு! - பிரித்திவிராஜின் புதிய திரைப்படங்கள்
கொச்சி: நடிகர் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகவுள்ள பிரமாண்ட திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் ப்ரித்விராஜ் தற்போது 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். கரோனா நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு ரத்தாகி வீட்டிலிருக்கும் ப்ரித்விராஜ் தான் அடுத்ததாக முழுக்க முழுக்க விர்ச்சுவல் புரொடக்சன் (virtual production) தொழில்நுட்பத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
'அவதார்', 'தி லைன் கிங்' உள்ளிட்ட திரைப்படங்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் உருவானவை. அதாவது வழக்கமாக திரைப்படங்களில் சில காட்சிகளுக்கு பின்னால் பச்சை அல்லது நீல நிற வண்ண திரை அமைக்கப்பட்டு படமாக்கப்படும்.
பின் இந்த காட்சிகள் எடிட்டிங் செய்யும்போது அவற்றுடன் தேவையான கிராபிக்ஸ் விஷுவல் இணைக்கப்படும். ஆனால் இந்த விர்ச்சுவல் புரொடக்சன் தொழில்நுட்பம் ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான எல்இடி திரைகளுக்கு முன்னால் தான் அதன் படப்பிடிப்பு நடைபெறும். திரையின் பின்னால் அந்த காட்சிகளுக்கு தகுந்தாற்போல் திரைக்கு முன்னால் நடிகர்கள் நடிப்பார்கள்.
கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ப்ரித்விராஜே மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ரித்விராஜ் கூறியிருப்பதாவது, "திரைப்பட உருவாக்கத்தின் கலை மற்றும் அறிவியலில் இது ஒரு ஆச்சரியமான புதிய அத்தியாயம். மிகுந்த ஆர்வத்துடன் இதை நான் எதிர்நோக்கி உள்ளேன். மாறும் காலம், புதிய சவால்கள், புதுமையான வழிமுறைகள், சொல்ல ஒரு அட்டகாசமான கதை, படம் பற்றிய தகவலுக்கு இணைந்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனுடன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள முழு இந்தியா திரைப்படம். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
'என்னு நிண்டே மொய்தீன்' திரைப்படத்தின் இயக்குநர் விமல், 'தர்ம ராஜ்யா' என்னும் திரைப்படத்தை மலையாளத்தில் இதே தொழில்நுட்பத்தில் உருவாக்கவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.