மலையாளத்தில் மறைந்த இயக்குநர் சச்சி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளியான திரைப்படம், 'அய்யப்பனும் கோஷியும்'.
முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து உருவான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருந்தது, ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் நஞ்சம்மாள் பாட்டி பாடிய 'கலக்காத்தா சந்தனம் மேரா வெகு வேகா பூத்திருக்கு, பூப்பறிக்க போகிலாமோ' பாடல் கேரளாவைத் தாண்டி பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
'அய்யப்பனும் கோஷியும்' மலையாளத்தைத் தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தற்போது தெலுங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தெலுங்கு ரீமேக்கை இயக்கும் த்ரிவிக்ரம்
த்ரிவிக்ரம் இயக்கும் இப்படத்தில் காவலராக பவன் கல்யாணும், முன்னாள் ராணுவ வீரராக ராணா டகுபதியும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்டத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமானதிலிருந்து படக்குழு அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் அறிமுகப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து நேற்று (செப்.20) இப்படத்தில் ராணா டகுபதியின் டேனியல் சேகர் கதாபாத்திரத்தின் வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் கவனம் பெற்றது.
இதனையடுத்து ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பிரித்விராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பல்வேறு காரணங்களால் அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக மிக விசேஷமானது. நான் நடித்ததில் பெருமைப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றாக கோஷி குரியன் என்றுமே இருக்கும்.
இந்தப் படத்தின் ரீமேக் குறித்து நானும் சச்சியும் பல முறை பேசியிருக்கிறோம். ஆனால், தெலுங்குத் திரையுலகின் பெரும் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் பங்கெடுத்து, இந்தப்படத்தை இவ்வளவு பிரமாண்டமானதாக ஆக்குவார்கள் என்று நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.
பவன் கல்யாண், த்ரிவிக்ரம், ரவி.கே. சந்திரன் ஆகிய திறமைசாலிகள் முன்னெடுக்க தமன் இசையமைக்க, இந்தப் படம் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
ஆனால், எனக்கு இதில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி, என் அன்பு நண்பர், சகோதரர் ராணா டகுபதி, தெலுங்கில் கோஷி குரியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தான்.
சகோதரா நீங்கள் பார்க்க அட்டகாசமாக இருக்கிறீர்கள். எனக்கு இருந்ததை விட உங்களிடம் அதிக நயம் உள்ளது. டேனியல் சேகர் வேட்டியில் கலக்குகிறீர்கள் சகோ." எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போலிக் கணக்கு தொடங்கிய நபருக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்விராஜ்