தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகர் பிருத்விராஜ், 'லூசிஃபர்' படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருந்தார். மேலும், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய், கலாபவன் சஜோன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு முரளி கோபி கதை, திரைக்கதை எழுதியிருந்தார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவும், சம்ஜித் முஹமத் படத்தொகுப்பும் செய்திருந்தனர். தீபக் தேவ் இசையமைத்த இப்படத்தை ஆசீர்வாத் சினிமா தயாரித்திருந்தது.
கடந்தாண்டு மார்ச் 28ஆம் தேதி அரசியல் த்ரில்லராக வெளியான இப்படம், ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று குறுகிய நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்த மலையாள படம் என்ற சாதனையை படைத்தது.
இதைனத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், எனது நண்பரும், சகோதரரும், சக நடிகருமான முரளி கோபிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் ஏற்கனவே பல கனவுகளை பகிர்ந்துள்ளோம். தற்போது 'எம்புரான்' படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.