தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'விஷால் அளித்த புகார் மனவேதனை அளிக்கிறது' - ஆர்.பி. செளத்ரி - சக்ரா திரைப்படம்

சென்னை: நடிகர் விஷால் தன் மீது அளித்த புகார் குறித்து படத்தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

vishal
vishal

By

Published : Jun 19, 2021, 6:50 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனத்தை ஆர்.பி. செளத்ரி நிர்வகித்துவருகிறார்.

இந்த நிலையில், ஆர்.பி. செளத்ரி மீது விஷால் தி.நகர் காவல் துணைஆணையரிடம் பண மோசடி குறித்தான புகார் ஒன்றை சமீபத்தில் அளித்தார். இது கோலிவுட் வட்டாராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விஷால் அளித்த புகார் தொடர்பாக ஆர்.பி. செளத்ரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் விஷால் இரும்புத்திரை படம் தயாரிக்க என்னிடம் பைனான்ஸ் வாங்கியிருந்தார். அந்தப் படத்திற்கு நானும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியிமும் சேர்ந்து பணம் கொடுத்தோம்.

இரும்புத்திரை படம் வெளியீட்டில் விஷால் எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் பாதித் தொகையைக் கொடுத்துவிட்டு மீதியை சில தவணைகளில் கொடுப்பதாகக் கூறினார்.

நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் படம் வெளியாக வேண்டுமென்று ஒப்புக்கொண்டு கிளியரன்ஸ் கொடுத்தேன். இறுதியாக இருந்த பாக்கித் தொகையை அவர் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் வெளியீட்டில் தருவதாகக் கூறியிருந்தார். சக்ரா படத்தின் வெளியீட்டின்போது எனக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பூர் சுப்பிரமணியம் சக்ரா படத்தின் கோயம்புத்தூர் ஏரியா விநியோக உரிமையைப் பெற்றுள்ளதாகவும் அதில் வரும் ஓவர் ஃப்ளோ பணத்தின் மூலம் எனக்கு வர வேண்டிய தொகையை கொடுத்துவிடுவதாகவும் கூறினார் அதற்கும் நான் ஒப்புக்கொண்டேன்.

அதன் அடிப்படையில், நானும் விஷாலும் 2021 பிப்ரவரி 20 அன்று வழக்கறிஞர் மூலமாக இரும்புத்திரை, சக்ரா ஆகிய இரு திரைப்படங்களுக்குமான வரவு செலவு கணக்கு முடிந்துவிட்டதாக ஓர் ஓப்பந்தம் செய்துகொண்டோம்.

'இரும்புத்திரை' பைனான்ஸுக்காக (Negative Rights) எனது நிறுவனத்தின்‌ பெயரிலும்‌ அத்துடன்‌ சில உறுதிமொழிப் பத்திரங்களையும்‌ (Stamp Paper, Green Sheet, Pronote, Cheques, Letterhead) கொடுத்திருந்தார்‌. (Negative Rights) எனது நிறுவனத்தின்‌ பெயரிலிருந்த காரணத்தால்‌ திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ பணத்திற்காக விஷால்‌ கொடுத்த மேற்கண்ட பத்திரங்களை எங்கள்‌ இருவருக்கும்‌ பொதுவான 'ரெட்டை ஜடை வயசு', 'ஆயுதபூஜை' படத்தின்‌ இயக்குநர்‌ சிவக்குமாரிடம் கொடுத்துவைத்திருந்தேன்‌.

இந்த நிலையில்‌ திடீரென சிவக்குமார்‌ மாரடைப்பால்‌ மரணம்‌ அடைந்துவிட்டார்‌. அவர்‌ திருமணமாகாதவர்‌ என்பதால்‌ தனி நபராக அடுக்குமாடிக் குடியிருப்பில்‌ வாழ்ந்துவந்தார்‌. ஆகவே, அவர்‌ இறந்தது இரண்டு நாள்களுக்குப் பின்புதான்‌ மற்றவர்களுக்கே தெரியவந்தது.

அதன்பின்‌ அந்தப் பத்திரங்களை எங்கு வைத்தார்‌ என்று தெரியவில்லை. எப்படியும்‌ கிடைத்துவிடும்‌ என்ற நம்பிக்கையில்‌ அவருக்குத் தெரிந்த நபர்களிடம்‌ விசாரித்தும்‌ இன்றுவரை கிடைக்கவில்லை. அதன்பின்‌ கரோனா காலம்‌ தொடங்கிவிட்டது.

இந்நேரத்தில்‌ எனக்கும்‌ விஷாலுக்கும்‌ இடையில்‌ பணம்‌ வாங்கிக் கொடுக்கும்‌ லக்‌ஷ்மன்‌ என்பவர்‌ மூலம்‌ அந்தப் பத்திரம்‌ கிடைக்காமல்‌போன விஷயத்தை விஷாலுக்குத் தெரிவிக்குமாறு கூறினேன்‌.

இந்த நிலையில்‌ விஷால்‌ 2021 ஜூன் 7இல்‌ காவல் துறையில்‌ என்னிடம்‌ கொடுத்த உறுதிமொழிப் பத்திரங்கள்‌ திரும்பக் கிடைக்கவில்லை என்றும்‌, அதை வேறு யாரிடமும்‌ இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்துத் தாருங்கள்‌ என்றும்‌ புகார்‌ ஒன்றைக் கொடுத்துள்ளார்‌.

அவர்‌ கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதென்றே நானும்‌ கருதுகிறேன்‌. ஏனெனில்‌ வேறு யாரின்‌ கையில்‌ இருக்குமோ என்ற பயத்தில்‌ அதைக் கொடுத்துள்ளார்‌.

ஆனால்‌, அவர்‌ என்னிடமும்‌ கலந்து பேசி நாங்கள்‌ இருவரும்‌ சேர்ந்து புகார்‌ அளித்திருந்தால்‌ தெளிவாக இருந்திருக்கும்‌. ஏனெனில்‌ 2020 ஜனவரியில்‌ அவர்‌ தயாரித்து இயக்கும்‌ 'துப்பறிவாளன்‌2' திரைப்படத்தின்‌ சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையின்‌ மீது என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியுள்ளார்‌. இந்த பைனான்ஸ்‌ வாங்கிய தேதியிலிருந்து இன்றுவரை வட்டியும்‌ அசலும்‌ நிலுவையில்‌ உள்ளன.

இந்த நிலையில்‌ ‘இரும்புத்திரை’ படத்தின்‌ உறுதிமொழிப் பத்திரங்களை வைத்து நான்‌ மோசடி செய்ய முயல்வதாக விஷால்‌ புகார்‌ செய்துள்ளார்‌ என்ற செய்திகள்‌ ஊடகங்கள் மூலம்‌ வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

நான்கு மொழிகள்‌, 92 திரைப்படங்கள்‌, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில்‌ இப்படி ஒரு அவதூறு புகாரை நான்‌ சந்திப்பது இதுவே முதல்‌ முறையாகும்‌. இதுவரை என்னுடைய பணம்‌ பிறரிடம்‌ பாக்கி வர வேண்டியதே தவிர மற்ற எவருடைய பணமும்‌ என்னிடம்‌ இல்லை என்பது தென்னிந்திய திரை உலகத்திற்கே தெரியும்‌, என்னுடைய இந்த அறிக்கையின்‌ தாமதத்திற்குக் காரணம்‌ இந்தச் சம்பவம்‌ நடக்கும்‌ சமயத்தில்‌ நான்‌ வெளியூரில்‌ இருந்த காரணத்தினால்‌ சென்னைக்குத் திரும்பிய பிறகு என்னுடைய தன்னிலை விளக்கத்தை தங்களுடன்‌ பகிர்ந்துகொள்கிறேன்‌.

மேலும்‌ ஓர்‌ அறிவிப்பு

சிவக்குமாரிடம்‌ இருந்த உறுதிமொழிப் பத்திரங்கள்‌ (Stamp Paper, Green Sheet, Pronote, Cheques, Letterhead) அவரைச் சார்ந்த நபர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ இருந்தால்‌ அதை என்னிடமோ, விஷாலிடமோ, அல்லது காவல் துறையிடமோ ஒப்படைக்கவும்‌, மீறி அதை வைத்திருப்பவர்களோ அல்லது பயன்படுத்த முயற்சி செய்வதோ தெரியவந்தால்‌ மிகக் கடுமையான குற்றவியல்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்பதை ஊடகங்கள்‌ மூலம்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details