தினக்கூலி பணியாளர்களுக்கு தங்க இடம் அளித்து அவர்கள் குடும்பத்துக்கு பண உதவி வழங்கி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்தியாவை கரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பல்வேறு பணியாளர்களும் தினக்கூலி தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசும் மத்திய அரசும் அறிவித்துள்ளன.
மேலும் திரை பிரபலங்களும் பல்வேறு நிதியுதவிகளை வழங்கிவருகின்றனர். இதனிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி உள்ளார். எவ்வாறு கொண்டாடப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில், இன்று என் பிறந்தநாளில், பாண்டிசேரி, சென்னை, கம்மம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீடின்றி இருந்த 11 கூலி பணியாளர்களுக்கு தங்க ஒரு இடத்தை ஏற்பாடு செய்துள்ளேன். இது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல. நம் பொறுப்பும் கூட. மனிதத்தைக் கொண்டாடுவோம். ஒற்றுமையுடன் இதில் போராடுவோம்.
அவர்கள் குடும்பங்களுக்கு கொஞ்சம் பண உதவி செய்துள்ளேன். அவர்கள் பாதுகாப்புக்கு உறுதி கொடுத்தேன். நாம் அனைவரும் ஊரடங்கு நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்பதை பகிரவேண்டும். நீங்களும் ஒரு குடும்பம் அல்லது ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரகாஷ்ராஜின் இந்தச் செயலால் இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியபோதே தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்துவிட்டதாக ட்வீட் செய்திருந்தார்.