தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி நடிகராக மாறியிருக்கும் பிரஜின், அண்மையில் மலையாளத்தில் வெளியான லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் அவர், இந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி?
மலையாளத்தில் 'சண்டக்கோழி' பட வில்லன் நடிகர் லால் இயக்கத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்தப் படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பைப் பாராட்டினார். அப்போதுதான் அவரும் 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து அறிமுகமாகியிருந்த சமயம். அதன்பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் முன்னணி கதாநாயகனாக மாறிவிட்ட அஜு வர்கீஸ்தான், இந்த 'லவ் ஆக்ஷன் ட்ராமா' படத்தில் இணை தயாரிப்பாளார்.
இத்தனை ஆண்டுகளாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ், உடனே கேரளாவுக்கு கிளம்பி வரச்சொன்னார். அங்கே போனதும்தான், இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்
நிவின் பாலி - நயன்தாராவுடன் நடித்து அனுபவம் குறித்து? இந்தப் படத்தின் ஹீரோவான நிவின்பாலி, எந்தவித ஒரு பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாகப் பழகினார். தமிழிலிருந்து வரும் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு தரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
அதேபோல நயன்தாராவுடன் இந்தப் படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவதுபோல வசனம் பேசியிருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.
கேரளாவில் உங்கள் நடிப்புக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
இந்தப் படத்தை பார்த்தவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். முக்கியமாக எனது நடிப்பைப் பாராட்டிய அஜு வர்க்கீஸ், காஸ்ட்லியான வாட்ச் ஒன்றை பரிசளித்தார். கேரளாவின் மிகப்பெரிய விருதைப் பெற்றதுபோல் உணர்ந்தேன்.
அடுத்து நீங்கள் நடித்து வரும் படங்கள் குறித்து?
தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படத்தில் நடித்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. இது தவிர தற்போது மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. விஜய் தொலைக்காட்சியில் மீண்டும்மொரு பிரமாண்டமாக தொடரில் என்னை எதிர்பார்க்கலாம்.