டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மிஷன் இம்பாசிபிள்'. இந்தப் படத்தின் வரிசையிஸ் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக 2018ஆம் ஆண்டு ’மிஷன் இம்பாசிபிள்: ஃபால் அவுட்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குயரி, டாம் க்ரூஸை வைத்து 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை பாரமாவுண்ட் தயாரித்து வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவில் நடைப்பெற்று வந்த 'மிஷன்: இம்பாசிபிள் 7' படப்பிடிப்பு முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் சமூகவலைதளத்தில் செய்திகள் வைரலாக பரவியது. 'ராதே ஷயாம்' படத்திற்காக இத்தாலியில் நடைப்பெற்ற படப்பிடிப்பின்போது பிராபஸூம் கிறிஸ்டோபர் மெக்குயரியும் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்தன.