நடிகர் யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் அதிக படங்களில் நடித்து இருந்தேன். ஒரு சீன் அல்லது இரண்டு சீன்கள் மட்டுமே நடித்து இருந்தேன். அந்த படங்கள் எல்லாம் இப்பொழுது திரைக்கு வரும்பொழுது என்னை போஸ்டரில் முன்னிலைப்படுத்தி சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வெளியிடுகின்றனர்.
பார்வையாளர்களை ஏமாற்றாதீர்கள் - யோகிபாபு வேண்டுகோள் - யோகி பாபுவின் படங்கள்
சென்னை: போஸ்டரில் என் படத்தை முன்னிலைப்படுத்தி பார்வையாளர்களை ஏமாற்றாதீர்கள் என்று தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நடிகர் யோகிபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தயவுசெய்து இப்படி செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். ஒரு சில விநியோகஸ்தர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் இருப்பதால்தான் இந்த படத்தை வாங்கினோம் என்று கூறினர். அதேபோன்று சேலம், திருச்சி போன்ற இடங்களில் இருந்து ரசிகர்கள் நீங்கள் நடித்துள்ளதால் தான் படத்திற்கு சென்றோம். ஆனால் ஒருசில சீன்களில் மட்டுமே நீங்கள் இருப்பதாகக் கூறி வருத்தப்பட்டனர்.
எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. தற்பொழுது கூட 'தவுலத்' என்ற படத்தில் என்னை முன்னிலைப்படுத்தி போஸ்டர் வெளியிட்டிருந்தனர். இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது, தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சீன்களில் நடித்திருந்தால் ஹீரோவாக போஸ்டர் அடிக்காதீர்கள். நான் ஹீரோவாக நடித்து இருந்தால் மட்டுமே அப்படி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அந்த வீடியோ பதிவில் யோகி பாபு தெரிவித்துள்ளார்.