லாஸ் ஏஞ்சல்ஸ்: தகுந்த இடைவெளி தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் கதாநாயகன், நாயகி இடையேயான நெருக்கமான காட்சிகளை படமாக்க புதுமையான யுக்தியை செயல்படுத்த ஹாலிவுட் திரையுலகினர் தயாராகவுள்ளனர்.
ஜூன் 12ஆம் தேதி முதல் ஹாலிவுட் திரைப்படங்கள், டிவி என பொழுதுபோக்கு துறை சார்ந்த அன்றாட பணிகள் மீண்டும் தொங்கப்படவுள்ளது. இதையடுத்து இதற்கான பணிகளில் தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் முழுவீச்சில் இறங்கத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து திரைப்படங்களின் வர்த்தக சங்கம் 22 பக்கங்களுடன் கூடிய வரைமுறைகளை வெளியிட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தின் ஆளுநர், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பாளர் பணிகளுக்கான அனுமதி வழங்கியபின் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் வகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் முக்கிய அம்சமாக, கதாநாயகன், நாயகிகக்கிடையேயான நெருக்கமான காட்சிகள், இதர கதாபாத்திரங்கள் ஒருவரை ஒருவர் தொட்டு நடிப்பது பற்றி சில விதிமுறைகளை கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, படக்குழுவினர்கள், நடிகர், நடிகைகள் என அனைவருக்கும் கரோனா தொற்று சோதனை மேற்கொள்வதுடன், கைகளை கழுவுவது பற்றி அறிவுரைகளும், அதற்கான ஏற்பாடுகளும் வழங்கவேண்டும். படப்பிடிப்பு தளம், இதர தயாரிப்பு இடங்களில் கரோனா பாதிப்பு கண்டறியும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
அத்துடன், நெருக்கமாக நடிக்க வேண்டியை காட்சிகளின் திரைக்கதையை மாற்றியமைத்தல் அல்லது காட்சிப்படுத்தப்படாமல் கைவிடுதல் அல்லது சிஜி (கம்யூட்டர் கிராபிக்ஸ்) மூலம் எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏராளமான ஹாலிவுட் படங்கள் ரிலீஸுக்கு க்யூவில் இருப்பதுபோல், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கூறிய வரைமுறைகளுடன் வரும் வாரத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.