சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகிவரும் 'அருவா' படத்தில் தான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என பூஜா ஹெக்டே அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகவுள்ளது. இதையடுத்து அவர் ஆறாவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள 'அருவா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளைத் தேர்வுசெய்யும் பணிகளில் பிஸியாக உள்ளார்.
அந்தவகையில் இதில் ஹீரோயினாக யாரை நடிக்கவைக்கலாம் என யோசித்த படக்குழு, பூஜா ஹெக்டேவை அணுகியதாகவும் அவரும் கதை கேட்டுவிட்டு, நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சமூகவலைதளத்தில் செய்திகள் உலாவந்தன.
தற்போது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பூஜா ஹெக்டே அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், "அனைவருக்கும் வணக்கம், நான் இப்போது தமிழ் படத்தில் நடிக்க உள்ளேன் என்ற முடிவுக்கு யாரும் செல்ல வேண்டாம். என்னிடம் தொடர்ந்து இரண்டு கதைகள் கைவசம் உள்ளன.
இப்போதைக்கு நான் எந்தத் தமிழ் திரைப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எல்லாம் சரியாக நடந்தால் இந்தாண்டு நிச்சயம் தமிழ் படத்தில் நடிப்பேன் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த ட்வீட்டால் தற்போது ரசிகர்கள் உலாவிய சந்தேகம் தீர்ந்துள்ளது.
ஏற்கனவே ஹரி இயக்கத்தில் சூர்யா, ’ஆறு’, ’வேல்’, ’சிங்கம்’, ’சிங்கம் 2’, ’சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.