இந்தி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தியில் 12ஆவது சீசன் முடிந்து 13ஆவது சீசன் ஒளிபரப்பாகிறது. தமிழில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டு மூன்று வாரங்களை கடந்து செல்லும் நிலையில், தெலுங்கில் மூன்றாவது சீசன் தொடங்கும் முன்னரே கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. நடிகை ஸ்வேதாவை தொடர்ந்து காயத்ரி குப்தா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவரிடம் கொச்சையாக கேள்விகள் கேட்கப்பட்டதால் கோபத்துடன் காயத்ரி கிளம்பி சென்றார். இதுகுறித்து பல குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில், நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளை தொடங்க இருக்கிறது. இதனைத்தொடர்ந்து உஷ்மானியா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 'உண்டு ஃபேவர்ஸ்' அமைப்பின் சார்பில் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஸ்டுடியோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து போராட்டம் செய்தனர். நாகர்ஜுனாவை சந்தித்து கோரிக்கை வைக்க முனைந்தனர்.