சென்னை: கேட்போரை உருக வைக்கும் மெழுகுக் குரலுக்கு செந்தக்காரரான பாடகர் உன்னி மேனன், கேரள மாநிலம் குருவாயூரில் பிறந்தவர்.
சிறு வயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் கொண்டவரான இவர், மலையாளப் படங்களில் பின்னணிப் பாடகராக தன் பயணத்தைத் தொடங்கி, இளையராஜாவின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
வெளியான முதல் பாடல்
பின்னணிப் பாடகர் உன்னி மேனன் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் 1985ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ என்ற திரைப்படத்தில் உள்ள ‘பொன் மானே கோபம் ஏனோ’ என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் அனைவராலும் அறியப்பட்டார். பின்னர் சென்னைக்கு புலம் பெயர்ந்து கனரக வாகனத் தொழிற்சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தார்.
அதன் பிறகு மீண்டும் அனைவரது கவனத்தையும் அவர் மீது ஈர்த்த பாடல், ரோஜா படத்தில் ஏ.ஆர்,ரகுமான் இசையில் மெகா ஹிட்டான ”புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது”.
இப்ப்பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அதன் பின்னர் 90களில் தமிழ் சினிமாவில் முழுமையாக தன்னை ஆக்கிரமித்துக் கொண்டார்.
மறக்கமுடியாத பாடல்கள்
இவரின் மெழுகுக் குரலில், ‘செவ்வந்தி பூவெடுத்தேன்’, ‘என்ன விலை அழகே’, ‘மானா மதுர மாமரக் கிளையிலே’, ‘நதியே நதியே’, ‘சந்திப்போமா இருவரும் சந்திப்போமா’ என ஹிட்டடித்த பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
உன்னி மேனன் பாடிய சில பாடல்களை கேட்கும்போது வானத்தில் பறப்பது போன்ற உணர்வு மேலோங்கும். இசையமைப்பாளர் ஒரு விதத்தில் இதற்கு பங்களித்தாலும், பாடகர்களின் குரல் ரசிகர்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சி அளப்பரியது. அதில் பாடகர் உன்னி மேனனின் குரல் தனித்துவமான, அலாதியான ஒன்று.
இன்று தனது 64ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் பாடகர் உன்னி மேனனுக்கு ஈ டிவி பாரத் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: உலக இளைஞர்கள் தினம் - லட்சம் இளைஞர்கள் இங்கே ஒரு விவேகானந்தர் எங்கே?