பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'பிங்க்'. வேலைபார்க்கும் மூன்று பெண் தோழிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளையும் அந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை நிலவரத்தையும் அடிப்படையாக வைத்து வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வழக்கறிஞராக நடித்திருந்தார்.
தொடர்ந்து, 'பிங்க்' திரைப்படத்தை தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் தல அஜித், அமிதாப் பச்சன் நடித்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். பாலிவுட்டைத் தொடர்ந்து கோலிவுட்டிலும், இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையைப் படைத்தது.
இதையடுத்து தற்போது தெலுங்கிலும் 'பிங்க்' படத்தை ரீமேக்செய்ய முடிவுசெய்துள்ளனர். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு 'லாயர் சாப்' எனப் பெயர் வைத்துள்ளனர். இதில் பவன் கல்யாணுடன் நடிகை அஞ்சலி, நிவேதா தாமஸ், அனன்யா நாகலா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீ வெங்கடேஷ் கிரியேஷன் சார்பில் வேணு ஸ்ரீராம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். விறுவிறுப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றுவருகிறது. கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதையும் வாசிங்க: #NKP 'நோ' என்றால்... 'நேர்கொண்ட பார்வை' தி கன்குளுஷன்!