வாஷிங்டன்: அயர்லாந்து இயக்குநர் டெர்ரி லோனே இயக்கும் 'தி லாஸ்ட் ரைஃபில்மேன்' என்ற படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் புரோஸ்னன்.
பிரட்டனிலுள்ள கிழக்கு சசெக்ஸ் பகுதியில் இருக்கும் கருணை இல்லம் ஒன்றில் வாழ்ந்து வந்த பெர்னார்ட் ஜோர்டன், அங்கிருந்து தப்பித்து டி-டே நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற சுவாரஸ்ய பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது 'தி லாஸ்ட் ரைஃபில்மேன்'. வடமேற்கு ஐரோப்பா பகுதியை ஆக்கிரமித்திருந்த ஜெர்மனி படையை பின்நோக்க வைப்பதற்காக, பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் விமான, கப்பல் படைகள் ஒன்றாக இணைந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள நார்மாண்டி என்ற இடத்தில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிகழ்வு டி-டே தரையிறக்கம் என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இந்த டி-டே தரையிறக்கத்தை நினைவுகூறும் விதமாக, ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 70வது டி-டே நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு, 89 வயதான இரண்டாம் உலகப் போர் நாயகன் பெர்னார்ட் ஜோர்டன் தான் தங்கியிருந்த கருணை இல்லத்திலிருந்து, பேருந்து மூலம் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்துக்குச் சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் பிரான்ஸுக்கு சாகச பயணம் செய்துள்ளார்.
இப்பயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு,பியர்ஸ்புரோஸ்னன் நடிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. படத்தை அயர்லாந்தைச் சேர்ந்த டெரி லோனே இயக்கவுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது, சமீபத்தில் இரண்டாம் உலகப் போரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. எனவே அதுபற்றிய ஒரு கதையை சொல்ல இது சரியான நேரம் என நினைக்கிறேன் என்றார்.