நடிகர் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்ராஜ் கூட்டணியில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு ரஜினி ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான கதை அமைப்புடன் இப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இப்படத்தின் மரண மாஸ் பாடல் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் தற்போது யூடியூப் வலைதளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது. 'பேட்ட' படம் வெளியாகி பத்து மாதங்கள் ஆனபோதிலும், இன்று வரை அது ஏதோ ஒரு வகையில் சாதனைப் படைத்து வருகிறது.
இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து இமயமலைக்கு பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் நேற்று வீடு திரும்பினார். அவர் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இதையும் பேட்ட படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.